கிரிக்கெட் விளையாடியவரை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.25 ஆயிரம் வசூலிக்க வேண்டும்


கிரிக்கெட் விளையாடியவரை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.25 ஆயிரம் வசூலிக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 May 2021 5:09 AM GMT (Updated: 6 May 2021 5:09 AM GMT)

கிரிக்கெட் விளையாடியவரை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.25 ஆயிரம் வசூலிக்க வேண்டும் அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சென்னை, 

சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த எம்.சரண்ராஜ் என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஜாபர்கான்பேட்டை ராகவரெட்டி காலனி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு 2 போலீஸ்காரர்களுடன் வந்த குமரன் நகர் சப்-இன்ஸ்பெக்டர் எம்.சுகன்யா, இங்கு கிரிக்கெட் விளையாடக் கூடாது எனக் கூறி என் கன்னத்தில் அறைந்தார். அவருடன் வந்த போலீஸ்காரர்கள் என்னை லத்தியால் தாக்கினர்.

போலீஸ் நிலையத்துக்கும் அழைத்துச் சென்று என்னைத் தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர், பல வெற்றுக் காகிதங்களில் கையெழுத்தும், ரூ.1,500-ம் வாங்கிக்கொண்டு என்னை விடுவித்தார். அதன்பின் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். அதே நேரம், என்னிடம் பெற்ற தொகையை கோர்ட்டில் அவர்கள் செலுத்தவில்லை என்பதும் எனக்குத் தெரியவந்தது. இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், சரண்ராஜுக்கு ரூ.25 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு இழப்பீடாக வழங்கிவிட்டு, அந்தத் தொகையை சப்-இன்ஸ்பெக்டரிடம் வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

Next Story