டேங்கர் லாரியில் இருந்து ஆக்சிஜன் கசிவால் பரபரப்பு


டேங்கர் லாரியில் இருந்து ஆக்சிஜன் கசிவால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 May 2021 6:09 AM GMT (Updated: 6 May 2021 6:09 AM GMT)

நவிமும்பையில் இருந்து கோலப்பூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி அனுப்பி வைக்கப்பட்டது.

மும்பை, 

மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சு திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நவிமும்பையில் இருந்து கோலப்பூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த லாரி சம்பவத்தன்று மாலை 6.15 மணி அளவில் சத்தாராவில் உள்ள புனே- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்த லாரியின் டேங்கரில் இருந்து ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் சென்றவர்கள் பரபரப்பு அடைந்தனர்.

உடனடியாக லாரியை நிறுத்திய டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் தொழில்நுட்ப குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த லாரியில் ஆக்சிஜன் கசிவை சரிசெய்தது.

தொடர்ந்து லாரி அங்கிருந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் வீணான ஆக்சிஜன் அளவு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அதிகப்படியான ஆக்சிஜன் டேங்கரில் நிரப்பப்பட்டதால் அழுத்தம் காரணமாக கசிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே தட்டுப்பாடு காரணமாக தினமும் 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக தேவைப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் ஆக்சிஜன் வீணானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story