கீழ்வேளூர், தேவூர் பகுதிகளில் கொரோனா தடுப்பு குழுவினர் ஆய்வு - முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்


கீழ்வேளூர், தேவூர் பகுதிகளில் கொரோனா தடுப்பு குழுவினர் ஆய்வு - முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்
x
தினத்தந்தி 6 May 2021 11:38 AM GMT (Updated: 6 May 2021 11:38 AM GMT)

கீழ்வேளூர், தேவூர் பகுதிகளில் கொரோனா தடுப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

சிக்கல்,

நாகை மாவட்டத்தில் கலெக்டர் பிரவீன்நாயர் அறிவுறுத்தலின்படி கொரோனா வைரஸ் 2-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கீழ்வேளூர் தாலுகா அளவில் கீழ்வேளூர் தனி தாசில்தார் மற்றும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அலுவலர் சாந்தி தலைமையில் தேவூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தியாகராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பேரூராட்சி வரி தண்டலர் மதன்ராஜ், வேளாங்கன்னி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய கொரோனா தடுப்பு குழுவினர் கீழ்வேளூர் கடைத்தெரு, கீழவீதி, பட்டமங்கலம், இலுப்பூர் சத்திரம், ராதாமங்கலம், தேவூர் சந்தைப்பேட்டை, கச்சனம் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கிகள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள், டீக்கடை, காய்கறி, மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முககவசம் அணியாமல் இருந்த 8 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொரோனா தடுப்பு குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story