படகு இல்லத்தில் ஆணையாளர் திடீர் ஆய்வு


படகு இல்லத்தில் ஆணையாளர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 May 2021 4:45 PM GMT (Updated: 6 May 2021 4:45 PM GMT)

தண்ணீர் மாசுபடுவதை தடுக்க வால்பாறை படகு இல்லத்தில் ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை

தண்ணீர் மாசுபடுவதை தடுக்க வால்பாறை படகு இல்லத்தில் ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

படகு இல்லம் 

வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாழைத் தோட்டம் கரும்பாலம் பகுதியில் வால்பாறை சோலையார் அணை செல்லும் சாலையை ஒட்டிய இடத்தில் வாழைத்தோட்டம் ஆற்றின் நீர் ஆதாரத்தின் உதவியுடன் படகு இல்லம் அமைக்கப்பட்டது.

வால்பாறை பகுதி பொது மக்களுக்காக 5 நாட்கள் படகு சவாரி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விடுபட்ட பணிகளை மேற்கொள்வதற்காகவும் படகு சவாரியின் போது பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வராததாலும் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

திடீர் ஆய்வு 

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வால்பாறைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக படகு இல்லம் பயன்படுத்தப் படாமல் இருந்து வருகிறது. 

எனவே அங்கு தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் மாசுபடுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) காந்திராஜ் நேற்று அதிகாரிகளுடன் படகு இல்லத்துக்கு திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

நடவடிக்கை எடுக்க உத்தரவு 

படகு இல்லத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் மாசுபட வாய்ப்பு உள்ளதா?, அங்கு சாக்கடை தண்ணீர் கலக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். அத்துடன் படகு இல்லத்துக்கு வரும் தண்ணீரில் சாக்கடை கழிவுகள் கலக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துப்புரவு அதிகாரி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இது குறித்து ஆணையாளர் காந்திராஜ் கூறும்போது, படகு இல்லம் செயல்படலாம் என்ற உத்தரவு வரும்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் இருக்கும்படி விடுபட்ட அனைத்து பணிகளையும் உடனடியாக செய்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.


Next Story