நாகையில், மதியம் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன


நாகையில், மதியம் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன
x
தினத்தந்தி 6 May 2021 5:01 PM GMT (Updated: 6 May 2021 5:01 PM GMT)

ஊரடங்கு புதிய கட்டுப்பாடு காரணமாக நாகையில், நேற்று மதியம் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன

நாகப்பட்டினம்:
 ஊரடங்கு புதிய கட்டுப்பாடு காரணமாக நாகையில், நேற்று மதியம் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றுக்கு உள்ளவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்தொற்று பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புதிய கட்டுப்பாடுகள்
இருந்தும் நோய் தொற்று பரவலை கட்டுபடுத்த முடியவில்லை. எனவே அரசு நேற்று முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பால், மருந்தக கடைகளை தவிர மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள், டீக்கடைகள் மதியம் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று நாகை மாவட்டத்தில், மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள், கடைத்தெரு, பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
அபராதம்
12 மணிக்கு மேல்  வியாபாரம் செய்து கொண்டிருந்த சில கடைகளை போலீசார் எச்சரித்து அடைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். புதிய கட்டுப்பாடு காரணமாக நாகை, நாகூர் நகர் பகுதிகளைச் சுற்றியுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் பூட்டிக்கிடந்தன. இதனால் நாகை நகர பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
கீழ்வேளூர்
 கீழ்வேளூரில் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை, கச்சனம் சாலையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள். பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் சந்தைபேட்டை, இருக்கை, காக்கழனி, கச்சனம் செல்லும் சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.
 இதே போல் வலிவலம், சாட்டியக்குடி, கிள்ளுகுடி, நீலப்பாடி, குருக்கத்தி, ஆழியூர், சிக்கல் உள்ளிட்ட கிராம பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருவதால் மத்திய- மாநில அரசுகள் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாங்கண்ணி அருகே திருக்குவளையில் உள்ள கடைகள் 12 மணிக்கு அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வேதாரண்யம்
வேதாரண்யம் நகர் பகுதிகள் மற்றும் ஆயக்காரன்புலம் தாணிக்கோட்டகம், செம்போடை, கரியாப்பட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட 60 ஊராட்சிகளில் உள்ள வணிக வளாகங்கள், சிறு கடைகள் என  மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்டன. இதனால் வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story