கொரோனா ஊரடங்கு புதிய விதிமுறைகள் வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை


கொரோனா ஊரடங்கு புதிய விதிமுறைகள் வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை
x
தினத்தந்தி 7 May 2021 3:25 AM GMT (Updated: 7 May 2021 3:25 AM GMT)

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வியாபாரிகளை அழைத்து மாமல்லபுரம் போலீசார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

மாமல்லபுரம், 

தமிழகம் முழுவதும் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து அதிகமான மக்களுக்கு நோய் தொற்று பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மாவட்டம் தோறும் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து இத்தகைய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி நேற்று முதல் புதிய கட்டுபாடுகள் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் போலீஸ் துறை சார்பில் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வியாபாரிகள் முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகளுக்கான அவசர கலந்தாய்வு கூட்டம் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் நடைமுறை கட்டுபாடுகளை அனைத்து தரப்பு வியாபாரிகளும் பாரபட்சமின்றி கடைபிடித்திட வேண்டும். கொரோனா தொற்று தொடர்பாக புதிய கட்டுபாட்டு விதிமுறைகளை நடைமுறை படுத்தும் நோக்கத்தில் தாசில்தார் அலுவலக குழுவினருடன் சேர்ந்து மாமல்லபுரம் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், காய்கறி கடை, மளிகை கடை, இறைச்சி கடைகள் போன்றவை காலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்.

உயிர் காக்கும் மருந்து கடைகள், தனியார் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் போன்றவை மட்டும் முழு நேரம் இயங்கலாம் என்றும், அதற்கு மாமல்லபுரம் நகர வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மாமல்லபுரம் போலீசார் எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வியாபாரிகளிடம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் நகர அனைத்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

Next Story