புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அதிகாரிகளுடன், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை


புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அதிகாரிகளுடன், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை
x
தினத்தந்தி 7 May 2021 4:19 AM GMT (Updated: 7 May 2021 4:19 AM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன், கவர்னர் ஆலோசனை நடத்தினார்.

வாராந்திர கூட்டம்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கொரோனா மேலாண்மை குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் வாராந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கவர்னரின் செயலர்கள் சி.சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, தலைமை செயலர் அஸ்வனிகுமார், அரசு செயலர்கள் அருண் (சுகாதாரம்), வல்லவன் (உள்ளாட்சி), அபிஜித் விஜய் சவுத்ரி (கவர்னர் செயலர்), மாநில சுகாதார இயக்க திட்ட இயக்குனர் ஸ்ரீராமலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் சுகாதாரத்துறை செயலர் அருண் காணொளி மூலம் கொரோனா பரிசோதனை நிலவரம், தடுப்பூசி நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் படுக்கைகளின் நிலவரம் ஆகியவை குறித்து எடுத்துக்கூறினார்.

முழு ஊரடங்கு

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

அரசின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும் புதுச்சேரியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆஸ்பத்திரிகளில் பிராணவாயு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துதல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிக்சுமையை குறைக்க கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பதிவு செய்யப்பட்ட குரல் அறிவிப்பு செய்யும் முறையை உடனடியாக தொடங்குதல், இதற்கான பணியில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது, கடந்த வார கணக்கெடுப்பின்படி கொரோனா தொற்றால் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இளைஞர்களின் பெற்றோருக்கு அழுத்தமான தகவல்களை கொண்டு சேர்ப்பது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்தல் என முடிவு செய்யப்பட்டது.


Next Story