கொரோனா தொற்று புதிய கட்டுப்பாடுகள் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை


கொரோனா தொற்று புதிய கட்டுப்பாடுகள் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை
x
தினத்தந்தி 7 May 2021 4:30 AM GMT (Updated: 7 May 2021 4:30 AM GMT)

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி, 

தமிழகம் முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய நோய் தொற்றின் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி நேற்று முதல் புதிய கட்டுபாடுகள் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி போலீசாரின் சார்பில், புதிய கட்டுபாடுகளை வியாபாரிகள் முறையாக கடைபிடித்திட வலியுறுத்தும் நோக்கில் அனைத்து வியாபாரிகளுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நேற்று கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கு கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் அரசின் நடைமுறை கட்டுப்பாடுகளை அனைத்து தரப்பு வியாபாரிகளும் பாரபட்சமின்றி கடைபிடித்திட வேண்டும். கொரோனா பரவல் தொடர்பாக புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை நடைமுறை படுத்தும் நோக்கில் தாசில்தார் அலுவலக குழுவினருடன் சேர்ந்து போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் உயிர் காக்கும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

Next Story