டெலிபோன் ஒட்டுகேட்பு வழக்கு; ராஷ்மி சுக்லாவை கைது செய்ய இடைக்கால தடை; மும்பை ஐகோர்ட்டு உத்தரவு


டெலிபோன் ஒட்டுகேட்பு வழக்கு; ராஷ்மி சுக்லாவை கைது செய்ய இடைக்கால தடை; மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 May 2021 5:39 AM GMT (Updated: 7 May 2021 5:39 AM GMT)

சட்டவிரோத டெலிபோன் ஒட்டுகேட்பு வழக்கில் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ராஷ்மி சுக்லாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வழக்குப்பதிவு

மராட்டியத்தில் போலீஸ் நியமனம், இடமாற்றத்தில் ஊழல் நடந்ததாகவும், இது தொடர்பாக டெலிபோன் ஒட்டுகேட்டு திரட்டிய ஆதாரங்களை தாக்கல் செய்த புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ராஷ்மி சுக்லாவின் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். இதையடுத்து அரசின் ரகசிய தகவல்களை கசிய விட்டதாகவும், அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக டெலிபோன் ஒட்டுக்கேட்டதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆஜராகவில்லை

இதையடுத்து மும்பை பி.கே.சி. சைபர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 26, 28-ந் தேதிகளில் சம்மன் அனுப்பியும், தற்போது ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப். கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள ராஷ்மி சுக்லா ஆஜராகவில்லை. கொரோனா அச்சம் காரணமாக நேரில் ஆஜராக முடியாததால், கேள்விகளை இ-மெயிலில் அனுப்பி வைத்தால் பதிலளிப்பதாக தெரிவித்து விட்டார்.

மேலும் தனது மீதான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி ராஷ்மி சுக்லா தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, மனிஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், போலீஸ் குழு ஐதராபாத் சென்று ராஷ்மி சுக்லாவிடம் வாக்குமூலம் பெற இருப்பதாக தெரிவித்தார்.

கைது செய்ய தடை

இதையடுத்து குறுக்கிட்ட எதிர்தரப்பு வக்கீல், ராஷ்மி சுக்லா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு ெகாடுப்பதாக கூறியுள்ளார். எனவே போலீஸ் குழு ஐதராபாத் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர் மீது கைது போன்ற நடவடிக்கை கூடாது என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை வருகிற ஜூன் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதுவரை ராஷ்மி சுக்லாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story