கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு; தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் கட்டாயம்; மும்பை ஐகோர்ட்டு கருத்து


கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு; தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் கட்டாயம்; மும்பை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 7 May 2021 6:27 AM GMT (Updated: 7 May 2021 6:27 AM GMT)

கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக தனியார் ஆஸ்பத்திரிகள் சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்வது கட்டாயம் என்று மும்பை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

கட்டாயம்

மராட்டியத்தில் பெருகி வரும் கொரோனா காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், மூச்சு திணறலை தடுத்து சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் பல்வேறு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சாங்கிலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக பத்திரிகையில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதேபோன்று அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

அரசுக்கு உத்தரவு

மேலும் கொரோனா பெருகி வரும் நிலையில் 3-வது அலையும் வீச இருப்பதாக கூறப்படுவதால் தனியார் ஆஸ்பத்திரிகள் தாங்களே சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைப்பது அவசியம் என்று குறிப்பிட்டனர். தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தேவையான இட அளவு, செலவு, உபகரணங்களின் தேவை குறித்து அடுத்த 11-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசின் அட்வகேட் ஜெனரல் ஆசுதோஸ் கும்பகோணிக்கு உத்தரவிட்டனர்.

மேலும் பொதுநலன் வழக்கு ஒன்றில் பதிலளித்த ஆசுதோஸ் கும்பகோணி, மராட்டியத்திற்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினமும் 51 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவைப்படுவதாகவும், ஆனால் மத்திய அரசு தினமும் 35 ஆயிரம் மருந்துகளை மட்டும் வழங்குவதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த பிரச்சினையில் மத்திய அரசும் அழுத்தத்தில் உள்ளதால், அவர்களிடம் சண்டையிடவில்லை, கோர்ட்டின் கவனத்துக்காக சொல்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story