முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 840 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 840 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 May 2021 4:16 PM GMT (Updated: 7 May 2021 4:16 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 840 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டது.

அதன்படி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டும், வாகன சோதனை நடத்தியும் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களுக்கும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.

840 பேருக்கு அபராதம்

அந்த வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் வித்தனர். அதன்படி ஒரே நாளில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 840 பேருக்கு அபராதம் விதித்துள்ளனர். இதுதவிர சமூக இடைவெளியை கடைபிடிக்காத 99 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் இதுவரை முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 18 ஆயிரத்து 983 பேருக்கும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 384 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை காவல்துறை சார்பில் ரூ.39 லட்சத்து 88 ஆயிரத்து 600 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

Next Story