சாலையில் அமர்ந்து தம்பதி போராட்டம்


சாலையில் அமர்ந்து தம்பதி போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2021 7:13 PM GMT (Updated: 2021-05-08T00:43:46+05:30)

வெள்ளகோவிலில் பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் சாலையில் அமர்ந்து தம்பதி போராட்டம்

வெள்ளகோவில்
திருச்சியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). அவர் ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல்  திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தனது தாயை பார்க்க மனைவி மற்றும் குழந்தையுடன்  வெள்ளகோவில் வழியாக திருச்சிக்கு செல்ல முடிவு செய்தார்.
அதனால் நேற்றுகாலை வெள்ளகோவில் வந்து சேர்ந்தார். பின்னர் திருச்சி செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். வெள்ளகோவிலில் பல மணி நேரம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காத்திருந்தார், ஆனால் அந்த வழியாக வந்த பஸ்கள் நிறுத்தாமல் சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் திடீரென வெள்ளகோவில் கடைவீதியில் சாலையின் நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  உடனே தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் அங்கு விரைந்து வந்து பேசி சமாதானப்படுத்தி அந்த வழியாக வந்த பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story