தென்காசியில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு: பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்


தென்காசியில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு:  பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 7 May 2021 7:20 PM GMT (Updated: 7 May 2021 7:20 PM GMT)

தென்காசியில் 2-வது நாளாக நேற்று மதியத்துக்கு பிறகு கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் காலையில் பல இடங்களில் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென்காசி:
தென்காசியில் 2-வது நாளாக நேற்று மதியத்துக்கு பிறகு கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் காலையில் பல இடங்களில் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன. 

நேற்று முன்தினம் முதல் மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. 

கடைகள் அடைப்பு

தென்காசியிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு பிறகு மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உணவகங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கப்பட்டு பார்சல்கள் வழங்கப்பட்டன. 

நேற்று 2-வது நாளாக கடைகள் அனைத்தும் பகல் 12 மணிக்கு பிறகு அடைக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

போக்குவரத்து நெரிசல்

முன்னதாக, காலையில் கடைகளில் பொருட்கள் வாங்கவும், பல்வேறு பணிகளுக்காகவும் பொதுமக்கள் வாகனங்களில் திரண்டு சென்று வந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு, தனியார் பஸ்களில் குறைந்த அளவிேலயே பயணிகள் பயணம் செய்தனர். 
கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் அவ்வப்போது பொதுமக்கள் சாலைகளுக்கு வந்ததை பார்க்க முடிந்தது.

எனவே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story