50 சதவீத படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்


50 சதவீத படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 May 2021 7:42 PM GMT (Updated: 7 May 2021 7:42 PM GMT)

அனைத்து தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்:
அனைத்து தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம் 
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் கட்ட பரவல் அதிகஅளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவிட் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்று அதிகரிக்கும் நேர்வில் 50 சதவீத படுக்கைகள் தயார் நிலையில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வசதிகள் தேவை ஏற்படின் அதை உடடினயாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தால் அது தொடர்பாக உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொரோனா தடுப்பூசி 
தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களை தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக தனியார் விடுதிகளின் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்படலாம்.
கொரோனா 2-ம் கட்ட பரவலின் தீவிரத்தை எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story