வீடு வீடாக சென்று கொரோனா தொற்று கண்டறியும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள்


வீடு வீடாக சென்று கொரோனா தொற்று கண்டறியும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள்
x
தினத்தந்தி 7 May 2021 7:47 PM GMT (Updated: 7 May 2021 7:47 PM GMT)

தஞ்சை மாநகரில் உள்ள 55 ஆயிரம் வீடுகளுக்கும் சென்று கொரோனா தொற்றை கண்டறியும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரில் உள்ள 55 ஆயிரம் வீடுகளுக்கும் சென்று கொரோனா தொற்றை கண்டறியும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் இதுவரை ஆயிரத்து 688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 674 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 264 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
408 பேர் வீடுகளில் தனிமை
பாதிக்கப்பட்ட 408 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை மாநகராட்சி பகுதியில் கொரோனா அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக சென்று தொற்று கண்டறியும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 215 களப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 70 பேர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 55 ஆயிரம் வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளுக்கும் சென்று அவர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு அங்கன்வாடி பணியாளர்களுக்கு தினமும் 40 வீடுகள் குறையாமல் சென்று பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தினமும் 3 ஆயிரம் வீடுகள்
அதன்படி ஒரு நாளைக்கு 3000 வீடுகளுக்கு சென்று இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களிடம் பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்து அதில் ஏதாவது தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் சளி, காய்ச்சல், இருமல் இருந்தாலும் அவர்களும் பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து யாராவது வந்திருந்தால் அவர்கள் குறித்த தகவல்களையும் அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு  அறையை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தினமும் கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் 408 பேரையும் தினமும் காலை, மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை தொடர்புகொண்டு அவர்களிடம் விவரங்களைக் கேட்கிறார்கள். மேலும் அவர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் அதனை செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
மேலும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளப்படும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு உரிய பதிலை தெரிவிக்குமாறும் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story