மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகள்: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு


மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகள்: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 8 May 2021 12:11 AM GMT (Updated: 8 May 2021 12:11 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்தான முதல் 5 அறிவிப்புகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட முத்தான முதல் 5 அறிவிப்புகளை வெளியிட்டு கையெழுத்திட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கின்ற 5 அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. பொற்கால ஆட்சி தொடங்கிவிட்டது என்ற நம்பிக்கையை விதைத்திருக்கின்றன.

பொற்கால ஆட்சியின் அடையாளம்

இந்த 5 அறிவிப்புகளின் மூலம் நடுநிலையாளர்களின் மனதை ஸ்டாலின் கவர்ந்துகொண்டார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கைகள் என 5 முழக்கங்களை கருணாநிதி எழுப்பினார். அந்த வரிசையில் இந்த 5 அறிவிப்புகளும் இடம்பெறுகின்றன. இனி 5 ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அடையாளம் இது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினின் 5 பெரும் அறிவிப்புகள் தித்திப்பானவை மட்டுமல்ல. திகைத்து நிற்கும் கொரோனா காலத்து தெம்பூட்டும் நம்பிக்கை ஒளிவீச்சுகளாகும். “சொன்னதைச் செய்வோம், செய்வதையே சொல்வோம்'' என்பதை நடைமுறைப்படுத்தும் ‘புதிய செயலி'யின் வேகத்தைக் கண்டு நாடே பாராட்டும் என்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் 5 கோப்புகளில் முதல் நாளில் கையெழுத்திட்டு இருப்பது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நல்ல தொடக்கமாகும். நோய்த்தொற்று பரவும் சூழலில் பரிதவித்து நிற்கும் சாதாரண மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஆற்றுப்படுத்தும் முதல்-அமைச்சரின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்று பாராட்டுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்விதமாக கொரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் மக்களின் துன்பங்களை போக்குவதற்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை, ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்பது உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இது ஒரு நல்ல தொடக்கமாகும். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வரவேற்பதுடன், தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாக்குறுதிகள் தருவது வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல; அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று முதல்-அமைச்சர் நிரூபித்திருக்கிறார். முதல்-அமைச்சர் கையொப்பமிட்டுள்ள 5 கோப்புகளும், பிறப்பித்துள்ள 5 ஆணைகளும் தமிழகத்தில் நல்லாட்சி தொடங்கிவிட்டது என்கிற நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளன.

மேலும் பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி இருண்டு கிடக்கும் தமிழகத்தில் ஒளிபரவச் செய்யவேண்டும் என முதல்-அமைச்சரை வாழ்த்துகிறோம். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றென்றும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி...

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே, மக்கள் வரவேற்கும் செயல்திட்டங்களில் கையெழுத்திட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில், இக்கட்டான கொரோனா பரவல் நேரத்தில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இனி ஒரு உயிர்கூட தமிழகம் இழக்காத அளவுக்கு புதிதாக அமைந்துள்ள அரசு ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கும், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுப்பதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகளுக்கு சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தின் ஷெரீப் ஆகியோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Next Story