புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கைவரிசை: கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 8 பேர் கைது - கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்


புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கைவரிசை: கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 8 பேர் கைது - கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 May 2021 10:30 AM GMT (Updated: 8 May 2021 10:30 AM GMT)

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கைவரிசையை காட்டினர்.

பாகூர்,

வில்லியனூர் அடுத்துள்ள கீழ்அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 19). இவர் புதுச்சேரி தாகூர் கலை கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 21-ந் தேதி கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த தனது மாமா முனியாண்டியுடன், கடலூர் மீன் மார்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உறுவையாறு-அபிஷேகப்பாக்கம் ரோட்டில் உள்ள அய்யனார் கோவில் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், பரணிதரன், முடியாண்டியை வழிமறித்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் தவளக்குப்பம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் பதுங்கி இருந்த 8 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், அரியாங்குப்பம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்த ராஜீ என்கிற ரமணா (26), நல்லவாடு பகுதியை சேர்ந்த குமரகுரு (19), தானாம்பாளையத்தை சேர்ந்த விஷ்ணு (19), பாலாஜி (19), புதுக்கடையை சேர்ந்த ஜெயமூர்த்தி (21), அர்ஜூன் (20), கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (19), வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (21) ஆகியோர் என்பதும், கல்லூரி மாணவர் பரணிதரன், முனியாண்டியிடம் இருந்து பணம், செல்போன் பறித்ததும் தெரியவந்தது.

இதுதவிர தானாம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணையில் கண்காணிப்பு கேமரா, கம்ப்யூட்டர், மங்களம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வளவனூர் பஞ்சமாதேவி பகுதியில் வழிப்பறி செய்தது உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை கும்பலிடம் இருந்து 10 செல்போன், 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.3 ஆயிரம், கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா, 2 கத்தி, வெள்ளி காப்பு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜீ மீது 6 போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story