முக கவசம் அணியாததால் அதிக வழக்குகள் பதிவு, அபராதம் வசூல்: தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டம் முதலிடம் - கட்டுப்பாடுகளை மீறிய 5 கடைகள் மீது வழக்கு


முக கவசம் அணியாததால் அதிக வழக்குகள் பதிவு, அபராதம் வசூல்: தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டம் முதலிடம் - கட்டுப்பாடுகளை மீறிய 5 கடைகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 May 2021 5:26 PM GMT (Updated: 8 May 2021 5:26 PM GMT)

முக கவசம் அணியாததால் அதிக வழக்குகள் பதிவு, அபராதம் வசூல் செய்ததில் தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறிய 5 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் போலீஸ்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்கள் மீது இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 5 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது இதுவரை 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே இதுவரை தஞ்சை மாவட்டத்தில் தான் அதிகஅளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகஅளவில் அபராத தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகஅளவில் வழக்குப்பதிவு செய்தது, அதிகஅளவில் அபராதத்தொகை வசூலித்தது ஆகிய இரண்டிலுமே தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

இந்தநிலையில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை மளிகைக்கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் ஆகியவை மட்டும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பால் மற்றும் மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனைய மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை. ஆனால் சிலர் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்து இருந்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி தஞ்சை நகரில் 2 கடைகள், வல்லத்தில் 2 கடைகள், ஊரகப்பகுதியில் ஒரு கடை என மொத்தம் 5 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 887 வழக்குகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது 4 வழக்குகள் என நேற்று ஒரே நாளில் 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 400 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்தார்.

Next Story