நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது


நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 8 May 2021 5:26 PM GMT (Updated: 8 May 2021 5:26 PM GMT)

முழு ஊரடங்கு காரணமாக நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் சலூன் கடைகளில் ஆண்கள் குவிந்தனர்.

நாகப்பட்டினம்:
முழு ஊரடங்கு காரணமாக நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சலூன் கடைகளில் ஆண்கள் குவிந்தனர். 
முழு ஊரடங்கு 
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பால், மருந்து கடைகளை தவிர மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள், டீக்கடைகள் மதியம் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் 2 நாட்களாக நாகை மாவட்டத்தில், மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வந்தன.
கூட்டம் அலைமோதியது 
இருந்தும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால், அண்டை மாநிலங்களை போல் தமிழகத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று பரவலாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. நாளை முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதால் 2 வாரத்திற்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்காக நாகை கடை தெருவில் பொதுமக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விழாவுக்காக ஆடைகள் எடுக்க ஜவுளி கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். மேலும் ஹார்டுவேர்ஸ் கடைகள், செல்போன் சர்வீஸ் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகை கடை தெருவில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் அதிகம் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
சலூன் கடைகள் திறப்பு 
கொரோனா பரவலை தடுக்க கடந்த 26-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்கள், சலூன் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், மதுபான பார்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. இதனால் நாகை மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பொதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலானவர்கள் முடிவெட்டி கொள்வது வழக்கம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சலூன் கடைகள் திறக்க முடியவில்லை. இதற்கிடையே சலூன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டதால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர்.
நாளை முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்றும், இன்றும் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சலூன் கடைகளில் ஆண்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. நாகை ஆஸ்பத்திரி சாலை பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகை நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் காத்திருந்து ஆண்கள் முடிவெட்டி சென்றனர். 10 நாட்களுக்கு பிறகு கடைகள் திறந்ததாலும், 2 வாரம் முழு ஊரடங்கு என்பதாலும் சலூன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

Next Story