டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மது பிரியர்கள்


டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மது பிரியர்கள்
x
தினத்தந்தி 8 May 2021 5:30 PM GMT (Updated: 8 May 2021 5:30 PM GMT)

நாளை முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் நாகையில், டாஸ்மாக் கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுத்தனர். இவர்கள், மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர்.

நாகப்பட்டினம்:
நாளை முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் நாகையில், டாஸ்மாக் கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுத்தனர். இவர்கள், மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர்.
கொரோனா 2-வது அலை 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று வேகத்தை குறைக்கும் வகையில் வருகிற 20-ந் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி காய்கறி, மளிகை கடைகள், டீக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை.
படையெடுத்த மதுபிரியர்கள் 
இந்த நிலையில் நாளை(திங்கட்கிழமை) முதல் வரும் 24-ந் தேதி வரை 2 வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 வாரம் ஊரடங்கு காரணமாக நேற்று மற்றும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணிவரையும், மளிகை கடை, இறைச்சி கடைகள் உள்ளிட்டவை முழு நேரமும் திறந்திருக்கலாம் என உத்தரவிட்டப்பட்டது. இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் வாங்க படையெடுத்து சென்றனர்.
பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர் 
நாகை, புதிய பஸ் நிலையம், நல்லியான் தோட்டம், முதலாவது கடற்கரை சாலை, ரெயில் நிலையம், செல்லூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் காலை முதலே அலைமோதியது.நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டி போட்டுக் கொண்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர். அப்போது சில கடைகளில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது.
 மது பிரியர்கள் 2 வாரங்களுக்கு தேவையான மது பாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். மேலும் விலை குறைந்த குவாட்டர் பாட்டில்கள் விரைவில் விற்று தீர்ந்தன. இதையடுத்து மதியத்துக்கு மேல் டாஸ்மாக் கடைகளுக்கு வந்தவர்கள் விலை உயர்ந்த மதுபாட்டில்களை வேறு வழியின்றி வாங்கி சென்றனர்.

Next Story