கீரமங்கலம் பகுதியில் குப்பையில் கொட்டப்பட்ட பூக்கள்


கீரமங்கலம் பகுதியில் குப்பையில் கொட்டப்பட்ட பூக்கள்
x
தினத்தந்தி 8 May 2021 5:35 PM GMT (Updated: 8 May 2021 5:35 PM GMT)

கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் ஒரு நாளக்கு 3 டன் அளவிற்கு குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கீரமங்கலம், மே.9-
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் ஒரு நாளக்கு 3 டன் அளவிற்கு குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பூக்கள் உற்பத்தி
கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு, பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, பெரியாளூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு மற்றும் மழையூர், சம்மட்டிவிடுதி, வம்பன், திருவரங்குளம் உள்பட  100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி, செண்டி, பிச்சி உள்பட அனைத்து வகை பூக்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
குப்பையில் கொட்டப்படும் பூக்கள்
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பூக்கள் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. கிலோ ரூ.500, ரூ.1000 விற்க வேண்டிய மல்லிகை, முல்லை பூக்கள் கிலோ ரூ.50, ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஊரடங்கால் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் சுமார் 3 டன் அளவிற்கு பூக்கள் தேக்கமடைந்து குப்பைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இதனால் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இது போன்ற காலங்களில் விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story