நாகர்கோவில் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


நாகர்கோவில் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 8 May 2021 7:26 PM GMT (Updated: 8 May 2021 7:26 PM GMT)

நாளை (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் நாகர்கோவில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடுமையான வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

நாகர்கோவில், 
நாளை (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் நாகர்கோவில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடுமையான வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
அனைத்து கடைகளும் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறதே தவிர குறையவில்லை.
இதனால் தமிழக அரசு நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல் டீ கடைகள், உணவகங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
நாளை முதல் முழு ஊரடங்கு அமல் ஆக இருப்பதால் 8-ந் தேதியான நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதனால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடைக்கப்பட்டிருந்த அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டன.
மக்கள் கூட்டம்
குறிப்பாக மளிகை கடைகள், காய்கறி கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டு இருந்தன. இதேபோல் நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடை வீதிகளிலும் உள்ள கடைகள் திறக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.
நாகர்கோவில் மீனாட்சிபுரம், கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, கேப் ரோடு, பாலமோர் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், செட்டிகுளம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள் அனைத்தும் நேற்று காலை முதல் இரவு வரை திறக்கப்பட்டு இருந்தன.
15 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி தங்களுக்கு தேவையான பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்க கடை வீதிகளுக்கு இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வியாபாரமும் களை கட்டியது.
போக்குவரத்து நெருக்கடி
இதனால் நகரின் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து காலையில் இருந்து இரவு வரை அதிக அளவில் இருந்தது. எனவே கோட்டார் உள்ளிட்ட சில பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 
ஆங்காங்கே நின்று கொண்டிருந்த போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.

Next Story