கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி


கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 8 May 2021 7:52 PM GMT (Updated: 2021-05-09T01:22:20+05:30)

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்:

தற்கொலை முயற்சி
கொரோனா 2-வது அலையால், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் கொரோனா நோயாளி ஒருவர் திடீரென்று சிகிச்சை பெற்று வந்த இடத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவரை காப்பாற்றினர். பின்னர் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
விசாரணையில், மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் காமராஜர்புரத்தை சேர்ந்த சங்கர் (வயது 70) என்பது தெரியவந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கடந்த 1-ந்தேதி சங்கர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவரை உடனிருந்த கவனிக்க யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மன அழுத்தம் காரணமாக சங்கர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story