குடும்பத் தகராறில் மனைவி, மாமனார் கொடூர கொலை குடிபோதையில் ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்


குடும்பத் தகராறில் மனைவி, மாமனார் கொடூர கொலை குடிபோதையில் ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 8 May 2021 10:09 PM GMT (Updated: 8 May 2021 10:09 PM GMT)

சென்னை ராயப்பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி, மாமனாரை குடிபோதையில் ஆட்டோ டிரைவர் கொலை செய்தார்.

சென்னை, 

சென்னை ராயப்பேட்டை முகமது உசேன் தெருவைச் சேர்ந்தவர் முசாபர் (வயது 80). இவருடைய மகள் கவுசி நிஷா (50). இவர், முதல் கணவரை விட்டுபிரிந்து, ராயப்பேட்டை யானைக்குளம் 2-வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் காதர் (42) என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் வசித்து வந்தார். கவுசி நிஷாவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 21 வயது மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

அப்துல் காதர், ஆட்டோ டிரைவர் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் மெக்கானிக் வேலையையும் செய்து வந்தார். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தெரிகிறது.

இந்தநிலையில் கவுசி நிஷா, அவரது மகளை தவறான பாதையில் பயன்படுத்தி வருவதாக அப்துல் காதர் சந்தேகம் அடைந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த கவுசி நிஷா, 2-வது கணவர் அப்துல் காதரையும் பிரிந்து, தனது மகளுடன் ராயப்பேட்டை முகமது உசேன் தெருவில் உள்ள தனது தந்தை முசாபர் வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் அப்துல் காதர், மாமனார் முசாபர் வீட்டுக்கு நேற்று மாலை குடிபோதையில் கையில் பீர்பாட்டிலுடன் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர், கவுசி நிஷாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அவரை, முசாபர் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்துல் காதர், வீட்டில் இருந்த குக்கரை எடுத்து மாமனார் முசாபர் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் பீர் பாட்டிலாலும் அவரை தாக்கினார். இதில் முசாபர் நிலைக்குலைந்து சரிந்தார்.

அதன்பின்னர் காய்கறி அறுக்கும் கத்தியை எடுத்து மனைவி கவுசி நிஷாவின் கழுத்தில் வெட்டினார். இதில் அவரும் சரிந்து விழுந்தார். சிறிது நேரத்தில் தந்தை-மகள் 2 பேரும் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த இரட்டை கொலை குறித்து தகவலறிந்து வந்த ஜாம்பஜார் போலீசார், கொலையான 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் மனைவி, மாமனாரை கொலை செய்த அப்துல் காதரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story