பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கூட்டநெரிசல் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் மீது நடவடிக்கை
முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்களால் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தாம்பரம்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை(திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதையடுத்து சென்னையில் வேலை பார்த்து வந்த தென் மாவட்டங்கள் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று மதியம் முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.
இதனால் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டாலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவசரத்தில் பொதுமக்கள் கூட்டநெரிசலில் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு பஸ்களில் ஏறிச்சென்றனர்
அதேநேரம் பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுதாகர்(தாம்பரம்), பாஸ்கரன்(செங்கல்பட்டு) தலைமையில் வட்டார போக்குவரத்து கழக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பஸ்சின் அனுமதி தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் அதிக அளவு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல பெருங்களத்தூர் பஸ்நிலையத்தில் குவிந்ததால் சமூக இடைவெளியை மறந்து ஒருவரை ஒருவர் இடித்தபடியும், முண்டியடித்தும் பஸ்சில் ஏறிச்சென்றதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story