போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் அபராத தொகை செலுத்தலாம்
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் அபராத தொகை செலுத்தலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் அபராத தொகை செலுத்தலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தெரிவித்து உள்ளார்.
போக்குவரத்து விதிகள்
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எந்தந்த விதிமீறல் களுக்கு எவ்வளவு அபாராத தொகை விதிக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய அட்டவணை வழங்கும் நிகழ்ச்சி கோவையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு போக்குவரத்து விதிமீறல் அபராத அட்டவணைகளை போலீசாரிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டுதல், ஒருவழிப்பாதையில் செல்லுதல், அதிகவேகம் உள்பட 21 வகையான போக்குவரத்து விதிமீறல் களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான அபராத தொகையை பொதுமக்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
வாகனம் பறிமுதல்
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும். மேலும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு நாள் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு மறுநாள்தான் வழங்கப்படும். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்பட ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அபராத தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த அட்டவணை போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இனி அதன்படி தான் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story