மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் கொரோனா கட்டுக்குள் வரும்; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் கொரோனா கட்டுக்குள் வரும்; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 9 May 2021 3:42 AM GMT (Updated: 9 May 2021 3:42 AM GMT)

மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் கொரோனா கட்டுக்குள் வரும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுவையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலவச அரிசி

கொரோனா காரணமாக மக்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு வயிறார உணவு கிடைக்கவேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இலவசமாக வழங்க கூறியுள்ளார். அதற்காக புதுவை மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது 2 மாதங்களுக்கான அரிசி மொத்தமாக வழங்கப்படுகிறது. மாநிலத்துக்கு தேவையான அரிசி மத்திய அரசிடமிருந்து கிடைத்துள்ளது. விரைவில் மற்ற பகுதிகளிலும் வழங்கப்படும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

எச்சரிக்கை தேவை

அவரிடம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்துடன் பூகோள ரீதியாக இணைந்துள்ள புதுவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

கடை அடைப்புகளால் பாமர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். மக்கள் கட்டுப்பாடோடு இருந்தால் கொரோனா கட்டுக்குள் இருக்கும்.கொரோனா 2-வது அலையால் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரங்கசாமியுடன் ஆலோசனை

முதல்-அமைச்சர் ரங்கசாமியுடனும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்து உள்ளேன். மக்களின் நலன்கருதி எங்களது செயல்பாடுகள் இணக்கமாக இருக்கும். அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் என்ற முறையில் நான் உதவிகரமாக இருப்பேன்.

புதுவையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 800 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கேட்டிருந்த முகக்கவசங்கள், கவச உடைகள், ரெம்டெசிவிர், பல்ஸ் ஆக்சிமீட்டர் முதலிய கருவிகள் இன்னும் ஒரு சில நாட்களில் கிடைத்துவிடும்.

தடுப்பு முயற்சிகள்

மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வீட்டிலேயே இருக்கவேண்டும். சமூக இடைவெளியோடு பழகவேண்டும். முகக்கவசம் அணிந்தாலே 90 சதவீதம் தொற்று பரவலை கட்டுப்படுத்திவிடலாம். உயிரிழப்புகளை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கு குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்களும் வருமாறு:-

அமைச்சரவை விரிவாக்கம்

கேள்வி: புதுவை அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்-அமைச்சர் பட்டியல் வழங்கி உள்ளாரா?

பதில்: இதுவரை அப்படி எதுவும் என்னிடம் வழங்கப்படவில்லை.

கேள்வி: முழு ஊரடங்கு இல்லாவிட்டால் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படுமா?

பதில்: நேரத்தை குறைத்தால் அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள். அதிகரித்தால் நேரத்தை குறைக்க வேண்டும் என்கிறார்கள். எனவே இதுகுறித்து சிந்தித்து வருகிறோம். தற்போதுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story