புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார், தி.மு.க எம்.எல்.ஏ சிவா


புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார், தி.மு.க எம்.எல்.ஏ சிவா
x
தினத்தந்தி 9 May 2021 10:37 AM IST (Updated: 9 May 2021 10:37 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டமன்ற தி.மு.க. தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் சிவா எம்.எல்.ஏ. எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.

தி.மு.க. வெற்றி

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 14 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.13 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 6 இடங்களில் வெற்றிபெற்றது. இதன்மூலம் புதுவையின் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்கு அந்த கட்சி தள்ளப்பட்டது.

கடும் போட்டி

இந்தநிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்குள் கடும் போட்டி இருந்தது. குறிப்பாக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜிம் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர். தெற்கு மாநில தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 4 பேர் வெற்றிபெற்றனர். காரைக்கால் மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். எனவே தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் பதவியை சிவா எம்.எல்.ஏ.வுக்கு வழங்க தி.மு.க. தலைமை முடிவு செய்தது.

எதிர்க்கட்சி தலைவராகிறார்

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் நடந்து முடிந்த புதுவை சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற சிவா எம்.எல்.ஏ. மாநில தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக அறிவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் சிவா எம்.எல்.ஏ. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


Next Story