முதியோர், விதவை, முதிர்கன்னிகளுக்கு ஓய்வூதியத்துடன் கூடுதலாக ரூ.500 நிவாரணம்; புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
முதியோர், விதவை, முதிர்கன்னிகளுக்கு ஓய்வூதியத்துடன் கூடுதலாக இம்மாதம் ரூ.500 வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தொற்று அதிகரிப்பு
புதுவையில் கொரோனா 2வது அலையின் வேகம் காரணமாக தினமும் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 15க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர்.அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் தொற்று அடங்க மறுத்து வருகிறது. எனவே வேறுவழியின்றி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அன்றாடம் கூலி வேலைபார்த்து பிழைப்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வருவாய் இன்றி வாழ்வாதாரம் இழந்து குடும்பம் குடும்பமாக தவித்து வருகின்றனர்.
ரூ.500 நிவாரண தொகை
இந்த சூழலில் அவர்களது துயரத்தை போக்கும் வகையில் கொரோனா நிவாரணமாக முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசு சார்பில் இந்த ஒரு மாதம் மட்டும் ரூ.500 கூடுதல் தொகையாக வழங்க முதல்அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்அமைச்சர் ரங்கசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா 2வது அலை தொற்றினால் பொதுவாக மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். குறிப்பாக ஓய்வூதியம் பெறும் வயதானவர்கள் அவர்களின் உடல்நலம், நிதி மற்றும் உளவியல் பிரச்சினைகள் குறித்து பல சிக்கல்களை எதிர்கொள்வதை முன்னிட்டு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் முதியோர் ஓய்வூதியத்தில் ரூ.500 சேர்த்து கொடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
யார், யாருக்கு பயன்?
இதன்மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தற்போது பெறும் ஓய்வூதியத்தில் இருந்து கூடுதலாக ரூ.500 பெறுவார்கள். அதாவது முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், 3ம் பாலினத்தவர் என 1 லட்சத்து 54 ஆயிரத்து 847 பேர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.7 கோடியே 74 லட்சத்துக்கு 23 ஆயிரத்து 500 கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story