வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்ஒரே நாளில் ரூ.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்ஒரே நாளில் ரூ.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
x
தினத்தந்தி 9 May 2021 7:44 PM IST (Updated: 9 May 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.20 கோடியே 15 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க  வருகிற 24-ந் தேதி வரை முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும், ஊரடங்கை முன்னிட்டு நேற்று முன்தினமும், நேற்றும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணிவரை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பாக மதுபிரியர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு பிடித்த மதுவகைகளை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். பலர் ஊரடங்கு நாட்களுக்கு தேவையான மது, பீர் வகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றதை காண முடிந்தது. அதன்காரணமாக பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மது, பீர் வகைகள் விற்று தீர்ந்தன.

வேலூர் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின. அதேபோன்று அரக்கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.6 கோடியே 30 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தது.

வேலூர், அரக்கோணம் கோட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக ஒருநாளைக்கு ரூ.5 கோடி முதல் ரூ.5¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் முழுஊரடங்கையொட்டி நேற்று முன்தினம் ஒரேநாளில் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமாக ரூ.20 கோடியே 15 லட்சம் மதிப்பிலான மது, பீர் வகைகள் விற்பனையாகி உள்ளன. 

Next Story