தொரப்பள்ளி அருகே வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம்


தொரப்பள்ளி அருகே வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 9 May 2021 8:27 PM IST (Updated: 9 May 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

தொரப்பள்ளி அருகே வீ்ட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொரப்பள்ளி அருகே அள்ளூர் வயல் பகுதிக்குள் காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. 

குறிப்பாக பொதுமக்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்துகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் ஊருக்குள் புகுந்த அந்த காட்டுயானை, பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் அவர்கள் வீடுகளுக்குள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்தனர்.

பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரது வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது.  மேலும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை துதிக்கையால் எடுத்து தின்றது. இதனால் ஜார்ஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்தில் அலறினர்.

இதுகுறித்து கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதன் பலனாக நேற்று அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து முதுமலை வனத்துக்குள் காட்டுயானை சென்றது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தொரப்பள்ளி பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை வீடுகளை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று வருகின்றன. இதை பழகி விட்டதால் மீண்டும், மீண்டும் ஊருக்குள் வருகின்றன. 

எனவே காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க  நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டுயானைகளால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story