குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு
குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டுகின்றனர்.
அதை கொண்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 6, 7-ந் தேதிகளில்(விற்பனை எண்-18) ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு 20 லட்சத்து 81 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 14 லட்சத்து 80 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 6 லட்சத்து 1000 கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 18 லட்சத்து 76 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 91 சதவீத விற்பனை ஆகும்.
விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.22 கோடியே 80 லட்சம் ஆகும். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.4 விலை உயர்வு இருந்தது.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.270, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.300 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.95 முதல் ரூ.104 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.182 வரை ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.103 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.206 வரை விற்பனையானது.
அடுத்த ஏலம்(விற்பனை எண்-19) வருகிற 13, 14-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 22 லட்சத்து 88 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது. தேயிலைத்தூளுக்கு தொடர்ந்து விலை உயர்வு ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story