அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்
நீலகிரியில் இன்று முதல் முழு ஊரடங்கு என்பதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர்.
ஊட்டி,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி உள்ளது. ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதால், நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்க ஊட்டியில் மக்கள் குவிந்தனர். உழவர் சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக காய்கறிகள், பழங்களை வாங்கினர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, நுழைவுவாயில் மூடப்பட்டது. கொஞ்சம், கொஞ்சமாக உள்ளே சென்றவர்கள் காய்கறிகள் வாங்கி வந்த பிறகு வெளியே நிற்பவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் நுழைவுவாயில் பகுதியில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தின்பண்டங்கள், மளிகை, காய்கறி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வாகனங்களில் அதிகம் பேர் வந்ததால், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், லோயர் பஜார், மணிக்கூண்டு பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று இரவு 9 மணி வரை கடைகள் செயல்பட்டாலும் பகலில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
கோத்தகிரி நகருக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி, மீன் வாங்க கடைகளில் திரண்டனர். மேலும் மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்தது. அங்கு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவராக மார்கெட்டுக்குள் செல்லும் வகையில் நுழைவுவாயிலில் தடுப்புகளை வைத்தனர்.
இன்று முதல் மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் மீன், கோழி இறைச்சி மற்றும் மளிகை கடைகள் தவிர காய்கறி மற்றும் பழக்கடைகள் காந்தி மைதானத்தில் செயல்படுகிறது.
Related Tags :
Next Story