மன்னார்குடி கூத்தாநல்லூரில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி
மன்னார்குடி, கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மன்னார்குடி:-
மன்னார்குடி, கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மன்னார்குடியில் மழை
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் நுங்கு, இளநீர் மற்றும் குளிர்பானங்களை நாடிச்சென்று வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் கொட்டி தீர்ப்பதால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
வெப்பம் தணிந்தது
இந்த நிலையில் நேற்று மதியம் மன்னார்குடியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.
கனமழையால் மன்னார்குடி பாலகிருஷ்ண நகர் பகுதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. மழையினால் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் இந்த மழை கோடை பயிர்களுக்கு ஏற்றது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சாலை ஓர மரங்களுக்கும் இந்த மழை பயனை தரும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயில் மேலும் சுட்டெரித்ததால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். அவ்வப்போது மேகமூட்டம் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. ஆனாலும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காலை முதலே வழக்கம்போல் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது.
அதனை தணிக்கும் வகையில் நேற்று மதியம் சுமார் அரை மணிநேரம் மழை பெய்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ராநல்லூர், மரக்கடை, வேளுக்குடி, நாகங்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது.
Related Tags :
Next Story