2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு எதிரொலி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6¾ கோடிக்கு மது விற்பனை


2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு எதிரொலி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6¾ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 May 2021 10:02 PM IST (Updated: 9 May 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6¾ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

திருவாரூர்:-

2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6¾ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை முழுமையாக அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தொடர்ந்து 2 வாரங்கள் விடுமுறை என்பதால் மதுப்பிரியர்கள் திகைப்பில் உள்ளனர். 
அடுத்த 2 வாரங்கள் மதுபாட்டில்களை வாங்க வாய்ப்பில்லை என்பதால் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை கடந்த 2 நாட்களாக வாங்கி குவித்து வருகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் மது விற்பனை பல மடங்கு அதிகரித்தது. 

ரூ.6¾ கோடி

திருவாரூர் மாவட்டத்தில் 108 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த கடைகளில் கடந்த 2 நாட்களாக மதுப்பிரியர்கள் கூட்டம், கூட்டமாக திரண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். 
தங்களுடைய தினசரி தேவைகளுக்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது பாட்டில்களை வாங்கினர். பலர் சாக்குப்பைகளுடன் கடைகளை நோக்கி படையெடுத்ததையும் காண முடிந்தது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 80 லட்சம் மதிப்பில் பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story