தர்மபுரி நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு
தர்மபுரி நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதனை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதனை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் தடுக்க அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்படும் நேரம் குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விதித்துள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்காணிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பொது இடங்களில் மக்கள் தேவையில்லாமல் கூட வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். முழு ஊரடங்கின் போது தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
ட்ரோன் கேமரா
அதன்படி தர்மபுரி நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்காணிப்பு பணிக்கு போலீசார் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருகின்றனர்.
தர்மபுரி நகரில் 4 ரோடு பைபாஸ் ரோடு, பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் கடைகள் முறையாக அடைக்கப்பட்டு உள்ளதா? பொதுமக்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை போலீசார் இந்த ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று மாலை தர்மபுரி 4 ரோட்டில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story