30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி கடனாக கலெக்டர் பெயரை காலனிக்கு சூட்டிய மக்கள்
கருமத்தம்பட்டி அருகே 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி கடனாக கலெக்டர் பெயரை தங்கள் காலனிக்கு பொதுமக்கள் சூட்டி உள்ளனர்.
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி அருகே 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி கடனாக கலெக்டர் பெயரை தங்கள் காலனிக்கு பொதுமக்கள் சூட்டி உள்ளனர்.
காலனிக்கு அதிகாரியின் பெயர்
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர் சூட்டப்பட்டு இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் இங்கு ஒரு காலனிக்கே அரசு அதிகாரியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சாதாரண மக்கள், கோரிக்கை மனுக்களோடு அரசு அலுவலகங்களுக்கு பலமுறை சென்றாலும், அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுமா என்றால் அது அரிதுதான்.
அப்படியே ஒரு அதிகாரி உதவி செய்தாலும் அதை பொதுமக்கள் காலப்போக்கில் மறந்து விடுவார்கள். ஆனால் இங்கு தங்களுக்கு உதவி செய்ததை மறக்காமல் ஒரு காலனிக்கு அரசு அதிகாரியின் பெயரை அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வைத்து உள்ளனர்.
ஆம்... கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள விராலிக்காடு பகுதியில்தான் அந்த காலனி உள்ளது.
30 ஆண்டுகால கோரிக்கை
கடந்த 2011-ம் ஆண்டுவரை இந்தப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் 30 ஆண்டுகளாக தங்களுக்கு இலவச பட்டா கேட்டு பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் பலனில்லை.
பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பட்டா கிடைக்க வில்லை.
இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டில் கோவை மாவட்ட கலெக்டராக உமாநாத் இருந்தபோது, இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு மனு அளித்தனர்.
இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர், அங்கு 2 ஏக்கர் நிலத்தில் குடியிருந்து வரும் 80 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதனால் தங்களின் 30 ஆண்டுகால கனவு நிறைவேறியதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்துடன் தங்களுக்கு பட்டா வழங்கிய கலெக்டரை நினைவு கூறும் வகையில் அந்த பகுதிக்கு கலெக்டர் உமாநாத் காலனி என்று பெயர் சூட்டினார்கள். அத்துடன் அரசு ஆவணங்களில் அந்த காலனியின் பெயர் உமாநாத் காலனி என்றே இருக்கிறது.
அதன் பிறகு கலெக்டர் பணி மாறுதல் காரணமாக வேறு இடத்துக்கு சென்றாலும், கடந்த 10 ஆண்டுகளாக அந்தப்பகுதி கலெக்டர் உமாநாத் காலனி என்ற பெயரை தாக்கி நின்று வருகிறது.
தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாநாத், தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது அந்த காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நம்பிக்கை இருக்கிறது
இது குறித்து அந்த காலனியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, எங்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை சில நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த கலெக்டருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருடைய பெயரை எங்கள் காலனிக்கு வைத்து உள்ளோம்.
அவர் எங்களுக்கு உதவி செய்ததுபோன்று தமிழக மக்களுக்கும் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story