காவலரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி


காவலரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி
x
தினத்தந்தி 9 May 2021 10:49 PM IST (Updated: 9 May 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோவிலில் இரவு காவலரை தாக்கி, கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோவிலில் இரவு காவலரை தாக்கி, கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவில் காவலர் மயங்கி கிடந்தார்
மயிலாடுதுறை நகரில் காவிரி பாலக்கரையில் புகழ்பெற்ற விசாலாட்சி உடனான படித்துறை விஸ்வநாதர்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் இரவு காவலராக செங்கமேட்டுத் தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது 60) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தினந்தோறும் வீட்டில் இருந்து அவரது மகன்கள் உணவு எடுத்து வந்து கொடுப்பது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை குடும்பத்தினர் போன் செய்தும் சாமிநாதன் செல்போனை எடுக்காததால் அவரது மகன்கள் செந்தில், மணிகண்டன் ஆகியோர் கோவிலுக்கு வந்துள்ளனர். கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்களின் தந்தை சாமிநாதன் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பீரோல்-உண்டியல் உடைப்பு
இதனையடுத்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவித்துவிட்டு, சாமிநாதனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சாமிநாதனை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் அதிகாலையில் கோவிலின் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரவு காவலர் சாமிநாதனை தாக்கி விட்டு விஸ்வநாதர் சன்னதி கேட்டின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவையும், 4 அடி உயரமுள்ள சில்வர் உண்டியலையும் உடைத்துள்ளனர்.
ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு
பீரோவிலும், உண்டியலிலும் பணம் ஏதும் இல்லாததால் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்க்குகளை திருடிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர் என்பது தெரியவந்தது. இதுகுறி்த்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் உண்டியலை திறந்து ரூ.37 ஆயிரத்தை எடுத்து வங்கியில் செலுத்தியுள்ளனர். இதனால் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.37 ஆயிரம் தப்பியது. 
மர்மநபர்கள் கோவில் காவலரை தாக்கி, உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story