இன்று முதல் முழு ஊரடங்கு: கடைகளில் பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்


இன்று முதல் முழு ஊரடங்கு: கடைகளில் பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 May 2021 10:52 PM IST (Updated: 9 May 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் திரண்டனர்.

கிருஷ்ணகிரி:
இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் திரண்டனர்.
முழு ஊரடங்கு
கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதை தடுக்க, தமிழகம் முழுவதும்  இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக, நேற்று முன்தினமும், நேற்றும் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்தது.
அதன்படி நேற்று கிருஷ்ணகிரியில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடைகளுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றார்கள். அதே போல பல்பொருள் அங்காடிகள், இதர கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காகவும் பொதுமக்கள் குவிந்தனர். மேலும் ஜவுளிக்கடை, பலகார கடைகள், உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றார்கள்.
ஓசூர்
இதேபோல், ஓசூரில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதியில் உள்ள கடைகளில் திரண்டனர். மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள், துணிக்கடைகளில் குவிந்து, தங்களுக்கும், குடும்பத்திற்கும் தேவையான ஜவுளிகளை வாங்கி  சென்றனர். இதனால் மளிகை கடைகள், காய்கறி விற்பனை கடைகள், துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 
மக்கள் கூட்டம் காரணமாக ஓசூர் எம்.ஜி. ரோடு, தாலுகா அலுவலக சாலை, நேதாஜி ரோடு, பாகலூர் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஏராளமான மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஓசூர் பஸ் நிலையத்தில் குவிந்ததால், பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர்.

Next Story