விழுப்புரம் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை முட்புதரில் வீச்சு கல்நெஞ்சம் படைத்த தாய்க்கு வலைவீச்சு
விழுப்புரம் அருகே பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
முட்புதரில் பெண் குழந்தை
விழுப்புரம் அருகே காவணிபாக்கம் சாலையோரத்தில் உள்ள முட்புதரில் இருந்து நேற்று காலை குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள், குழந்தையின் அழுகுரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு முட்புதரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், குழந்தையை மீட்டு, பால் கொடுத்தனர். மேலும் இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆரோக்கியமாக இருப்பதாக...
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பெண் குழந்தையை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அந்த குழந்தைக்கு காயங்கள் ஏதும் இல்லை. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த குழந்தை தொடர்ந்து டாக்டர்களின் பராமரிப்பில் உள்ளது.
கல் நெஞ்சம்படைத்த தாய் யார்
இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையாக இருக்கலாமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அன்னையர் தினமான நேற்று பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story