மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிஆயுதப்படை போலீஸ்காரர் பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிஆயுதப்படை போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 9 May 2021 10:57 PM IST (Updated: 9 May 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்
போலீஸ்காரர்
நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள பொத்தனூர் கிராமத்தை  சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் கரூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடன் பீமராஜா (31) என்பவரும் ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மணிகண்டனும், பீமராஜாவும் ஒரு மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். கரூர் லைட்ஹவுஸ் அருகே உள்ள அமராவதி பாலத்தில் சென்றபோது, முன்னாள் சென்ற அரசு குளிர்சாதன பஸ்சை முந்த முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
பலி
இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பீமராஜா காயம் அடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் பசுபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயம் அடைந்த பீமராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் சக போலீசாரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்த மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story