கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 150 படுக்கை வசதியுடன் சிறப்பு மையம்
தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 150 படுக்கை வசதியுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் ஆய்வு செய்தார்.
கரூர்
150 படுக்கை வசதி
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு முதன்மைச்செயலரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
பின்னர் அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவுடன் சென்று ஆய்வு செய்தார்.
தடுப்பூசி கட்டாயம்
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறைகளின் தலைமை அலுவலர்களுடன் கொரோனா தொற்று தடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொறியியல் கல்லூரிகளில் என மொத்தம் 2,039 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கரூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு அதிகமானவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை கணக்கிட்டு அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழு ஒத்துழைப்பு
கொரோனா தொற்றுள்ள நபரிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும், தொற்றுள்ள நபர் வசித்து வந்த பகுதியில் உள்ள வயதானவர்கள், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தயவு செய்து அலட்சியமாக இருந்து விடாமல் விழிப்புடன் இருந்து அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், குளித்தலை சப்-கலெக்டர் ஷேக் அப்துல்ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story