இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது
இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைவீதிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் பஸ்களில் இடம் பிடிக்க பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டனர்.
கரூர்
இன்று முதல் முழு ஊரடங்கு
கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை முதல் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகிறது.
டாஸ்மாக்
இதனால் கரூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதனால் கடைவீதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் பொருட்கள் வாங்க நேற்று பொதுமக்கள் வந்த வண்ணமாக இருந்தனர். கரூரில் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு தேவையான மதுப்பானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் மது விற்பனை அமோகமாக நடந்தது.
பொதுமக்கள் திரண்டனர்
இன்று முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாததால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கரூர் பஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலையாகவே காணப்பட்டது. இவர்கள் பஸ்களில் இடம் பிடிப்பதற்காக ஒருவருக்கொருவர் போட்டி, போட்டு கொண்டதை காண முடிந்தது. இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story