சசிகலா தலைமையில் ஒன்றிணைய சுவரொட்டி புதுக்கோட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
சசிகலா தலைமையில் ஒன்றிணைய புதுக்கோட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
சுவரொட்டி
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. தி.மு.க. அமோக வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அ.தி.மு.க.வில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வை தலைமை ஏற்க சசிகலா வரவேண்டும் என புதுக்கோட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ஜெயலலிதா, சசிகலா, எம்.ஜி.ஆர். புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:- கழகத்தை காத்திட வாரீர்! வாரீர்!! புரட்சி தலைவர் உருவாக்கிய புரட்சி தலைவி அம்மா கட்டிக்காத்த கழகத்தை காத்திட தியாக தலைவி சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்... அ.தி.மு.க. தொண்டர்கள் புதுக்கோட்டை மாவட்டம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
பரபரப்பு
இந்த சுவரொட்டிகள் புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆங்காங்கே பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இதனை ஒட்டியது உண்மையிலேயே அ.தி.மு.க. தொண்டர்கள் தானா? அல்லது சசிகலா ஆதரவாளர்கள் இந்த சுவரொட்டியை ஒட்டினரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகி வந்த பின் சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில் சசிகலா தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைவோம் என ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story