அழிவின் விளிம்பில் தவிக்கும் சுண்ணாம்பு உற்பத்தித்தொழிலை மீட்டெடுக்க வேண்டும்
அழிவின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் சுண்ணாம்பு உற்பத்தித்தொழிலை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
போடிப்பட்டி
அழிவின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் சுண்ணாம்பு உற்பத்தித்தொழிலை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுண்ணாம்பு உற்பத்தி
சிப்பீ சிப்பீ திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டால் இந்த குரலைக் கண்டிப்பாக கேட்க முடியும். இன்றைய இளைய தலைமுறையினர் நிச்சயமாக இந்த குரலைக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டால் வீடுகளை சுத்தப்படுத்தி வெள்ளையடிக்கும் பழக்கம் என்பது மாறி பெயிண்ட் அடிக்கும் நாகரிக உலகத்தில்தான் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சைக்கிளில் ஒரு மூட்டை நிறைய வெள்ளை நிற கடல் சிப்பிகளை வைத்துக்கொண்டு வரும் சிப்பி வியாபாரியை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கும் காலம் உண்டு. அந்த வியாபாரி படியில் அளந்து கொடுக்கும் சிப்பிகளை எடுத்துக் கொண்டு போய் ஒரு தகர டிரம் அல்லது கல் தொட்டியில் போட்டு கொதிக்கும் நீரை அந்த சிப்பியின் மீது ஊற்றுவார்கள். இதற்கு சுண்ணாம்பு நீத்துதல் என்று பெயர். கெட்டியாக இருக்கும் சிப்பிகள் கொதிக்கும் நீருடன் வினை புரிந்து நீர்த்துப்போய் களி போன்ற சுண்ணாம்பாக மாறியிருக்கும். பெரும்பாலான கிராமத்துப்பாட்டிமார்கள் இந்த சுண்ணாம்பை எடுத்துப்போய் வெற்றிலை பாக்குடன் சேர்த்து தாம்பூலமாக்கிக் கொள்வார்கள். தென்னை மரத்தின் பாளைகளை நசுக்கி பிரஷாக்கி இந்த சுண்ணாம்புக் கலவையுடன் தண்ணீர் கலந்து அதில் தொட்டு சுவர்களுக்குப் பூசுவதை வெள்ளையடித்தல் என்பார்கள்.இவ்வாறு வீட்டிலேயே சுண்ணாம்பு உற்பத்தி செய்து வீடுகளுக்குப் பூசுவது ஒருவகை என்றால் சுண்ணாம்புப் பொடிகளை வாங்கி தண்ணீருடன் கலந்து பூசும் பழக்கமும் உண்டு. இதற்கு ஒரு விதமான ஓடைக்கற்களை சுண்ணாம்புக் காளவாய்களில் இட்டு சுண்ணாம்புப்பொடி உற்பத்தி செய்யப்படுகிறது.
அழிவுப்பாதை
நாளடைவில் நாகரீக வளர்ச்சியால் நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களும் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. ஓலை வீடுகள் ஒட்டு வீடுகளாக மாற்றம் பெற்றன.ஒட்டு வீடுகள் காரை வீடுகளாக மாற்றமடைந்தது. காரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றம் பெற்றன. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளை நிறமாக மட்டுமே காட்சியளித்த வீடுகள் இன்று பல வண்ணங்களில் கண்ணையும் மனதையும் சுண்டியிழுக்கிறது.ஒன்றின் அழிவிலிருந்து ஒன்று தொடங்குகிறது என்பது இயற்கையின் நியதி என்பார்கள். அப்படிதான் பெயிண்ட் கம்பெனிகளின் வரவு சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விட்டது என்று சொல்லலாம்.பெரும்பாலான கிராமங்களில் கோலோச்சிய சுண்ணாம்பு உற்பத்தித் தொழில் இன்று நொறுங்கிப் போய்க் கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது போன்ற நிலையில் அழிவிலிருந்து தப்பி தவித்துக்கொண்டிருக்கிறது ஒரு சில சுண்ணாம்புக் காளவாய்கள்.
கோழிப்பண்ணைகள்
அந்த வகையில் குமரலிங்கத்தையடுத்த பெருமாள்புதூர் பகுதியில் தற்போது காளவாய்கள் மூலம் சுண்ணாம்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது
நமது முன்னோர்கள் வீடுகளை வெறுமனே ஒதுங்கியிருக்க ஒரு இடம் என்று நினைக்கவில்லை. அதனை நம் வாழ்விடம் என்ற வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர். மழை, வெயிலிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் சீரான வெப்ப நிலை, சிறந்த காற்றோட்டம், பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு என்று ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்பு கவனத்தில் ஒன்றாகத்தான் வீட்டு சுவர்களுக்கு சுண்ணாம்பு பூசுவதும் இருந்திருக்கிறது. வீட்டுச்சுவரில் சுண்ணாம்பு பூசும்போது கொசுக்கள் முட்டையிடுவதில்லை. விஷப்பூச்சிகள் நடமாடுவதில்லை. கரையான்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை. மேலும் இன்று இருப்பது போல சுவாசக்காற்றில் ரசாயனங்களின் கலப்பு இருப்பதில்லை. சுவர்களுக்கு வெள்ளையடிப்பதற்கு மட்டுமல்லாமல் கட்டுமானப் பணிகளிலும் சுண்ணாம்புத் தூளைப் பயன்படுத்தியுள்ளனர். மணலுடன் சுண்ணாம்புத்தூள், கடுக்காய், கருப்பட்டிப்பாகு போன்றவற்றைக்கலந்து கட்டிய வீடுகள் இன்றைய கான்கிரீட் வீடுகளை விட வலுவுள்ளதாக இருந்துள்ளது. இப்படி பலவகைகளில் சுண்ணாம்பை பயன்படுத்தி வந்ததால் சுண்ணாம்புக்காளவாய்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது கோழிப்பண்ணைகளையும் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளையும் நம்பியே இந்த தொழிலை கடும் சிரமத்துக்கு மத்தியில் நடத்தி வருகிறோம்.
சுற்றுச்சூழல் மாசு
சுண்ணாம்பு உற்பத்திக்கு தேவையான ஓடைக் கற்களைக் கொண்டு வருவதில் பல சிரமங்கள் உள்ளது. மேலும் முன்பு ரயில்கள் நிலக்கரியில் இயங்கியது. அப்போது ரயில் கரி எனப்படும் நிலக்கரித்தூள் குறைந்த விலையில் கிடைக்கும்.அதனுடன் தென்னை மட்டைகள், காய்ந்த பனங்காய்கள், விறகு ஆகியவற்றைக்கலந்து கற்களுடன் காளவாய் எனப்படும் சூளைகளில் வைத்து நெருப்பு மூட்டுவோம். காலையில் சூளையைப் பற்ற வைத்தால் மறுநாள்தான் சுண்ணாம்பு எடுக்க முடியும். தற்போது நிலக்கரிதூள் மற்றும் பனங்காய்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால் எரிபொருட்களுக்கென அதிக அளவில் செலவு செய்ய வேண்டியதுள்ளது. உற்பத்தி செய்த சுண்ணாம்புத்தூளை ஒரு டிரம் ரூ.1200 என்ற விலையில் விற்பனை செய்கிறோம். கோழிப்பண்ணைகள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் கிருமிநாசினியாக சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. எனவே பண்ணையாளர்கள் நேரடியாக இங்கு வந்து சுண்ணாம்பு வாங்கிச்செல்கின்றனர். மேலும் சுருக்கி போடுதல், தென்னை மரங்களை கரையான்களிலிருந்து காப்பாற்றுதல், கிணறுகளில் வெள்ளையடித்தல் போன்றவற்றுக்கும் சுண்ணாம்பு வாங்கிச் செல்வார்கள். டிஸ்டம்பர், பெயிண்ட்கள், செயற்கை சுண்ணாம்புகள் போன்றவற்றால் கல் சுண்ணாம்புக்கு மவுசு குறைந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில பகுதிகளில் சூளைகளிலிருந்து வெளிவரும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் பலரும் இந்த தொழிலை விட்டு விட்டு பல்வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். எனவே சிறு தொழிலாக செயல்படும் சுண்ணாம்புக் காளவாய்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மானியத்துடன் கூடிய அல்லது வட்டியில்லாக் கடனுதவி வழங்கி தொழில் மேம்பாட்டுக்கு கைகொடுக்க வேண்டும் என்பது இந்த தொழிலில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story