மாவட்டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு; கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்


மாவட்டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு; கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 10 May 2021 12:48 AM IST (Updated: 10 May 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதை முன்னிட்டு கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

நெல்லை, மே:
நெல்லை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.

இன்று முதல் ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க குறிப்பிட்ட நேரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து தமிழக அரசு முழுமையான ஊரடங்கை அறிவித்தது. அந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருகிறது. இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 2 வாரங்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கடைவீதிகள்

இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு மட்டும் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. நெல்லையில் கடந்த 2 நாட்களாக சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாராம் நடைபெற்றது. அங்கு வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். நெல்லை டவுன், பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட்டுகள், மகராஜநகர் உழவர் சந்தை, டவுன் ரதவீதிகளில் உள்ள மளிகை கடைகள், பாளையங்கோட்டை கடை வீதிகளில் நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் மளிகை, காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச்சென்றனர்.

ஜவுளி - நகைக்கடைகள்

இதுதவிர வருகிற 15-ந் தேதி வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த மாதத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. இதற்காக குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுப்பதற்காக நெல்லை டவுன், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் குவிந்தனர். அங்கு மணமக்களுக்கும், குடும்பத்தாருக்கும் புத்தாடைகளை வாங்கினார்கள். மேலும் நகைக்கடைகளில் மணமகளுக்கு தாலிச்சங்கிலி உள்ளிட்ட நகைகளும் வாங்கினார்கள். இதனால் நெல்லையில் உள்ள நகைக்கடைகளிலும் நேற்று கூட்டம் அலைமோதியது.

டாஸ்மாக் கடை

இதேபோல் டாஸ்மாக் கடைகளும் 14 நாட்களுக்கு அடைக்கப்படுகிறது. அதனால் அங்கும் நேற்று மதுப்பிரியர்கள் வரிசையாக நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் அருகில் உள்ள ‘எலைட்’ மதுக்கடையில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். அவர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கினார்கள். அங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கண்காணிக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பஸ்களில் கூட்டம்

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து நெல்லைக்கு வந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் நெல்லை தற்காலிக பஸ் நிலையத்தில் இறங்கி மாற்று பஸ்களில் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதேபோல் நெல்லையில் தங்கி இருந்து வேலை செய்து வந்த இளைஞர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊர்களுக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். காலை நேரத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மாலையில் வெளியூர் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அவர்கள் நின்று செல்ல அனுமதிக்காமல் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

போலீஸ் கேண்டீன்

நெல்லை பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தற்காலிக பஸ் நிலைய நுழைவு வாசல் பகுதியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையத்துக்கு முககவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர்.நெல்லை ஆயுதப்படையில் போலீசாருக்கான கேண்டீன் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை, போலீசாரின் குடும்பத்தினர் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்தவாறு நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர்.சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் இதற்கான பணிகளை செய்தனர்.

Next Story