வெளிமாவட்டங்களுக்கு குறைவான பயணிகளுடன் சென்ற பஸ்கள்


வெளிமாவட்டங்களுக்கு குறைவான பயணிகளுடன் சென்ற பஸ்கள்
x
தினத்தந்தி 10 May 2021 12:56 AM IST (Updated: 10 May 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர். சொந்த ஊருக்கு வருவதிலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

நாகர்கோவில், 
குமரியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர். சொந்த ஊருக்கு வருவதிலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. 
சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதனால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு வசதியாக நேற்று முன்தினம் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி போன்ற பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
2-வது நாளாக...
இதேபோல் நேற்றும் 2-வது நாளாக மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 28 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று முன்தினம் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து நேற்று வந்து சேர்ந்தன. சென்னைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மட்டும் இன்று (திங்கட்கிழமை) காலை நாகர்கோவில் வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் சிறப்பு பஸ்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்தனர். ஒவ்வொரு பஸ்சிலும் குறைந்தது 30 முதல் அதிகபட்சமாக 45 பயணிகள் மட்டுமே பயணம் செய்தார்கள். இதனால் எதிர்பார்த்த அளவு பயணிகள் கூட்டம் இல்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயத்தில் சென்னை உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து குமரிக்கு வந்த பஸ்களிலும் கூட்டம் குறைவாக இருந்தது.
கூட்டம் குறைவு ஏன்?
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், முதல் கொரோனா பரவலின் போது சென்னையில் வேலை பார்த்த ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்த பலர் வீட்டில் இருந்தே (அதாவது சொந்த ஊரில்) பணிபுரிகின்றனர். மேலும், வியாபாரம் உள்ளிட்ட தொழில் பார்த்தவர்கள் சொந்த ஊரிலேயே சிலர் குடியேறி விட்டனர். 
சிலர் குடும்பத்தை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர். இதுபோன்ற காரணங்களால், முதல் கொரோனா அலை பரவலின் போது போடப்பட்ட ஊரடங்கிற்கு முந்தைய நாள் இருந்த கூட்டத்தை போல் 2-வது அலைக்கு பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லை என தெரிவித்தார்.

Next Story