முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.50 லட்சம், 75 பவுன் நகை திருட்டு


முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.50 லட்சம், 75 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 9 May 2021 7:36 PM GMT (Updated: 9 May 2021 7:36 PM GMT)

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.50 லட்சம், 75 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கருவூல காலனியை சேர்ந்தவர் உத்தமராஜா (வயது 59). முன்னாள் ராணுவ வீரர். 

அவருடைய மனைவி கனகேஷ்வரி. இவர், முத்துநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். 

உத்தமராஜா ராணுவத்தில் ஓய்வு பெற்ற பின்பு, ஆஸ்திரேலியாவில் வேலைபார்க்கும் மகன் வீட்டிற்கு சென்று இருந்தார். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஒட்டன்சத்திரம் திரும்பினார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான தேவத்தூர் அருகே உள்ள மடுராம்பட்டிக்கு சென்றார்.

 பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

 வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.50 லட்சம், 75 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

 திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். 

மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 

சம்பவ நடந்த வீட்டில் இருந்து திண்டுக்கல் மெயின்ரோடு ஒட்டன்சத்திரம் ஒன்றிய அலுவலகம் வரை ஓடி மோப்ப நாய் நின்றது. 


அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 




இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story