இன்று முதல் முழு ஊரடங்கு; உரிய காரணங்கள் இல்லாமல் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


இன்று முதல் முழு ஊரடங்கு; உரிய காரணங்கள் இல்லாமல் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 May 2021 1:35 AM IST (Updated: 10 May 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் முழு ஊரடங்கை முன்னிட்டு உரிய காரணங்கள் இல்லாமல் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி, மே:
தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. உரிய காரணங்கள் இல்லாமல் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முழு ஊரடங்கு

உயிர்க்கொல்லி நோயான கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது முறையாக தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய- மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வருவாய் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய துறையினர் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் மதியம் 12 மணிக்கு மேல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் 12 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி சென்றனர். சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கோவில் வாசல், மேல ஆவணி மூல வீதி, கூலக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூடியதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே போலீசார் நின்று அவர்களை ஒழுங்குபடுத்தினர். ரம்ஜான் நேரம் என்பதால் ஜவுளிக்கடைகளில் சற்று அதிகமான கூட்டம் காணப்பட்டது.
இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை தொடர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு 2 போலீஸ் நிலையங்களுக்கு இடையே ஒரு சோதனைச் சாவடி வீதம் மாவட்டம் முழுவதும் 18 சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மொத்தம் 800 போலீசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 300 போலீசார் தனியாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அவசர உதவிகளை செய்வார்கள். அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அடையாள அட்டைகளுடன் வரவேண்டும்.

வாகனங்கள் பறிமுதல்

அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை நடத்துவார்கள். ஒருவேளை அடையாள அட்டை எடுத்து வராவிட்டால் அவர்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு அடையாள அட்டையை கொண்டுவந்து காட்டினால் உடனடியாக அவரது வாகனங்கள் விடுவிக்கப்படும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உரிய காரணங்களின்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். உரிய காரணங்கள் உடனடியாக நிரூபிக்கப்பட்டால் வாகனங்கள் அந்த நேரத்திலேயே விடுவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story