கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன; அதிகாரி தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி கூறினார்.
ஈரோடு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி கூறினார்.
ஆய்வு
ஈரோடு மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரி மற்றும் கால்நடைத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் இருப்பு வைக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சி.கதிரவன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
அதைத்தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் கே.கோபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கை, மருத்துவமனை, பரிசோதனைகள், ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கப்பட்ட குடோன்களில் ஆய்வு செய்தோம். ஆக்சிஜன் கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கும் வகையில், படுக்கையுடன் கூடிய ஆக்சிஜன் இணைப்பு உள்ளன. உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதால், இங்கு 3 ஆயிரத்து 615 மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
2,435 பேர் தனிமை
மேலும் கொரோனா வைரஸ் பரவல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தற்போதைய பரவலை, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மூலமே தடுக்க முடியும். தற்போது ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 435 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அந்த இடம் மட்டும் கட்டுப்பாட்டு பகுதியாக பாவிக்கிறோம். அவர்களுக்கும், நோய் பாதித்தோர், குணமடைந்தோருக்கும், வழக்கமான சிகிச்சை மருந்துடன், சித்தா உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அல்லாமல் தனியாக 400-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்சிஜன்
கலெக்டர் சி.கதிரவன் கூறும்போது, 'பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 550 படுக்கையும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடியது. அங்கு 50 படுக்கைகள் வரை காலியாக உள்ளன. பிற அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகளில் 1,900 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் உள்ளது. இவற்றில் 170 படுக்கைகள் காலியாக உள்ளன.
பெருந்துறை சிப்காட்டில் உள்ள தேசிய கியாஸ் உற்பத்தி நிறுவனத்தில் தினமும் 30 டன் உற்பத்தி செய்து, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பிற அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி தயார் நிலையில் வைத்துள்ளோம். தனியாரிடம் தினமும் 3 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம். இது தவிர 400 சிலிண்டர் வரை தனியாக தயார் நிலையில் வைத்துள்ளோம்.
கொரோனா தடுப்பூசி
தற்போது வரை 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ஈரோடு மாவட்டத்துக்கு 1,500 கொரோனா தடுப்பூசிகள் வந்தன. மேலும் அரசிடம் தடுப்பூசி கேட்டுள்ளோம். வந்ததும் தொடர்ந்து மக்களுக்கு போடப்படும். தேசிய அளவில் தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தி செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக அரசு 2 லட்சம் தடுப்பூசி கேட்டுள்ளது. அது விரைவில் கிடைக்கும். தற்போது அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை தவிர, பிற சிறிய மருத்துவமனைகளில் 20, 30 என உள்ள படுக்கைகளையும் கணக்கிட்டு பட்டியலிடுகிறோம். தேவைப்பட்டால் அதையும் பயன்படுத்துவோம்' என்றார்
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story